அடியார் பெருமக்களுக்கு வணக்கம்.
நம்முடைய திருமுறைகள் எல்லாம் மந்திர சக்தி வாய்ந்தவை. அவற்றை முறையோடு பொருளுணர்ந்து ஓதினால் வாழ்க்கையில் வளம் பெறலாம். நம் வினைகளும் நீங்கும்.
`சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவநடிக்கிஎழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து` என்பார் மணிவாசகர். எனவே சில திருமுறைப் பாடல்களுக்கு அடியேனது சிற்றறிவுக்கு எட்டியவகையில் ஈண்டு விளக்கங்கள் தரலாம் என நினைக்கிறேன் .
முதல் பாடல் - திருஞானசம்பந்தர் அருளியது - திருமுறை - 1
தோடுடைய செவியன் விடையேறி வோர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளங் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே
தோடுடைய - தோடு என்பது பெண்கள் அணியக்கூடிய அணிகலன் . ஆனால் இங்கே செவியன் என்று குறிப்பிட்டிருப்பதால் அது இறைவனைக் குறித்த சொல்லாகிறது . இங்கே அவன் அர்த்தனாரியாக காட்சி அளித்திருக்கிறான் . அது மட்டுமல்ல . கயிலையில் இரு கந்தர்வர்கள் இறைவனிடம் `நாங்கள் எப்போதும் பாடிக்கொண்டேயிருப்போம். நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்` என்றனர். இறைவன் அதற்குச் சம்மதித்து அவர்கள் இருவரையும் இரு தோடாக மாற்றி அணிந்து கொண்டதாக வரலாறு .
விடை என்றது அவன் அமர்ந்த காளையைக் குறிப்பிட்டது . அது அரக்கடவுளையும் குறிக்கும் . ஓர் தூவேன் மதி சூடி - சிறப்புடைய வெண்மையான சந்திரனைத் தன் திருமுடியில் இறைவன் சூடியிருக்கிறான் . காடுடைய சுடலை பொடிபூசி என்றால் சுடுகாட்டில் உள்ள சாம்பலைத் தன் திருமேனியில் அணிந்து . என் உள்ளங்கவர் - எனது மனதைக கொள்ளை கொண்டவன் என்கிறார் .
ஏடுடைய மலரான் - பல இதழ்களை உடைய மலரான தாமரை மலர் மீது அமர்ந்தவனான பிரமன் .முனை நாட் பணிந்தேத்த - முன்னொரு காலத்தில் உன்னைப பணிந்த போது அவனுக்கு அருள் செய்தாய் . பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே - அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த சீர்காழியாகிய பிரமபுரம் என்னும் இத்தளத்தில் எழுந்தருள் செய்யும் இறைவன் இவனே .
மேலும் இந்தப் பாடல் அகத்துறையைச் சார்ந்தது. நாயக நாயகி பாவம் கொண்டது. உள்ளம் கவர் கள்வன் என்றதில் உள்ளம் என்ற சொல் மனத்தோடு தொடர்புடைய ஆன்மாவைக் குறிப்பிடுகிறது . ஆன்மாவுடன் தொடர்புடையவை முப்பத்தாறு தத்துவங்கள் என்று சைவ சித்தாந்தம் கூறும். இதில் இருபத்து நான்கு தத்துவங்கள் உள்ளத்துக்குச் சொந்தமானவை. இந்த ஆன்மாவானது இருபத்து நான்கு தத்துவங்களில் உழலும்போது இறைவன் இருப்பை உணர்வதில்லை . பந்த பாசங்களில் சிக்கித் தவிக்கிறது. அந்தத் தத்துவங்களை விட்டு நீங்கும்போது, அதாவது தன்னுடைய தத்துவங்களான பன்னிரண்டு தத்துவங்களில் உழலும்போது இறைவன் இருப்பை அதாவது இறை உண்மையை அறிய ஆரம்பிக்கிறது.
இதைத்தான் சம்பந்த மூர்த்தி நாயனார் இந்த இடத்தில் உள்ளம் கவர் கள்வன் என்றார். அதாவது என்னுடைய இருபத்து நான்கு தத்தவங்களை இறைவன் கவர்ந்து கொண்டான். எனவே என் ஆன்மாவானது அவனை அறிந்து கொண்டது என்கிறார். கள்வன் எனப்படுபவன் பிறர் பொருளை அவர்கள் அறியாமல் திருடுபவன். அந்த வகையில் பிள்ளையார் அறியாமல் அவன் அவர் உள்ளத்தைக் கவர்ந்துகொண்டான் என்று பொருளாகிறது.